இன்று பள்ளிக்கல்வித்துறை முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்தபிறகு விழாவில் பேசிய அன்பில் மகேஸ் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என்கிற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இது, மாணவர்களை தமிழ் மொழியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும்,” என்று அறிவித்தார். மேலும், “பள்ளிக்கல்வித்துறை, சாதியை ஒழிக்கும் கட்டடங்களாக செயல்படுகிறது.
கல்வி மற்றும் சுகாதாரத்தை இரு கண்களாக கருதி, முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கை தாண்டி உழைத்து வருகிறார்,” என்று குறிப்பிட்டார். அவர், அரசின் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தின் மூலம் பல்வேறு முன்னேற்றப் பணிகள் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த ஆசிரியர்கள் கல்வித்துறையின் குடும்பத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ், ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, “ஆசிரியர்களே, 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத்தேர்வு வரும், எங்களுக்கு பொதுத்தேர்தல் வரும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். இது அரசியல் பேச்சு அல்ல, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்காகவே பேசுகிறேன்,” என்று உரையாற்றினார். இந்த பேச்சு, ஆசிரியர்களுக்கு பொறுப்பு மற்றும் உற்சாகத்தை ஊட்டுவதாக அமைந்தது. தமிழக பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, இந்த புதிய ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.