Skip to content

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20 லட்சம் மோசடி… திருச்சியில் புகார்

வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடியை சேர்ந்த ராஜாமாணிக்கம் என்பவரின் மகன் சாம்சன் ராஜ் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகாத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்,

நான் திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடி மாதா கோவில் தெருவில் கடந்த கடந்த பல வருடங்களாக வசித்து வருகிறேன். கடந்த 2024 ஆம் ஆண்டு வேங்கூரை சேர்ந்த ராஜசேகர் என்கின்ற ராஜ் என்பவர் என்னிடம் அறிமுகமாகி, அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார். என்னை போல உறையூரை சேர்ந்த ரேபின் மற்றும் கிங்ஸ்லி, சாக்ரடீஸ் மற்றும் மணி உள்ளிட்ட பலரிடம் ஆசை வார்த்தை கூறி ராஜேஷ் அவரது தலைவர் சென்னையை சேர்ந்த இந்திரன், ராஜ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து பணத்தை கட்ட கூறினார். மேற்படி இந்திரன் என்பவரின் பேச்சைக் கேட்டு Gpay மூலமாக நான் 60 ஆயிரம் ரூபாயும், ரொக்கமாக 50 ஆயிரம் ரூபாயும் கொடுத்துள்ளேன். என்னைப் போலவே பலரும் வங்கி கணக்கில் 25 ஆயிரம், 35 ஆயிரம், 50 ஆயிரம் என ஆன்லைன் மூலமாகவும் கையில் ரொக்கமாகவும் பணத்தை கொடுத்துள்ளனர். திருச்சியில் மட்டும் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து நிறைய பேர் ஏமாந்து உள்ளனர். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சாம்சன் ராஜ் கூறும்போது..,

மாதா கோவில் தெருவில் உள்ள ஒரு சர்ச்சில் கூட்டம் நடத்தி அங்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை வசூல் செய்தனர். ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்து உள்ளோம். வெளிநாட்டிற்கு இதுவரை வேலைக்கு அனுப்பவில்லை. நாங்கள் பணத்தை கொடுத்த ராஜேஷ் என்பவர் உங்களால் என்ன முடியுமோ அதை செய்து பாருங்கள் என மிரட்டுகிறார். என்னைப் போல பலரும் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். அவருக்கு தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்க மறுக்கிறார். அழைப்பை துண்டித்து விடுகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!