குஜராத் மாநிலம், ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்கள் ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள். பவேஷ் பண்டாரியின் 19 வயது மகள், 16 வயது மகன் ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டில் துறவறம் பூண்டனர். அப்போதே பவேஷும், அவரது மனைவியும் தாங்களும் துறவறம் பூண்டுகொள்ள உறுதி எடுத்துக்கொண்டனர்.

பவேஷ் பண்டாரி கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஜெயின் மத வழக்கப்படி, துறவறம் பூண்டுகொள்பவர்கள் தீட்சை பெறுவது முக்கியத்துவமான ஒன்றாகும். இதன்படி, துறவு பூண்டுகொள்பவர்கள் தங்களது சொத்துபத்துகளை துறந்து, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து பிச்சை பெற்று ஜீவிதம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இதை முன்னிட்டு சமீபத்தில் பர்வேஷ் தம்பதியினர், 35 பேருடன் சேர்ந்து 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் ராஜா, ராணி போன்று சிறப்பு உடை அணிந்திருந்தனர். ஊர்வலத்தின் முடிவில் ரூ.200 கோடி மதிப்பிலான தங்கள் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினர்.

மொபைல் போன்கள், ஏர் கண்டிஷனர்கள் உட்பட அனைத்தையும் தானமாக வழங்கிவிட்டனர். ஊர்வலத்தின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அந்த வீடியோவில் இத்தம்பதியினர் அரச குடும்பத்தைப் போல உடையணிந்து ரதத்தின் மீது இருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் இம்மாத இறுதியில் நடக்கும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக துறவு வாழ்க்கைக்குள் நுழைகின்றனர். பவேஷ் பண்டாரி குடும்பத்தின் துறவு முடிவு குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.