Skip to content

சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் முருகேசன் (30). இவர் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சுவீட் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, முருகேசன் தனது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்றுள்ளார். இதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் சென்றிருந்தனர்.

இன்று அதிகாலை முருகேசனின் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகை மாதிரிகளைச் சேகரித்தனர். முருகேசன் குடும்பத்தினர் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே மர்ம நபர்கள் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அதே பகுதியில் உள்ள சலவை தொழிலாளி நாலாயிரம் உள்பட மேலும் இரண்டு பேரின் வீடுகளிலும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!