தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (30.1.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பல்வேறு முக்கிய விளக்கங்களை அளித்தார்:
“தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய இந்தியாவில் எந்த மாநில அரசாலும் முடியாது. இனச் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் பணி நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் அதை ஏற்காது. தற்காலிக ஊழியர்களின் ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். தற்போது நடக்கும் போராட்டங்கள் தனிநபர்களின் தூண்டுதலால் நடைபெறுகின்றன. பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் VHN போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளார், அவர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இத்தகைய போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன.”
“நான் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துபவன் அல்ல. அரசியலுக்கு வரும் முன்பே தொழிற்சங்கத் தலைவராக இருந்தவன். 1980-களில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோதே அவருக்கு எதிராகத் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தி, அவருடன் நேரடியாக விவாதம் செய்தவன் நான். எனவே, தொழிற்சங்க உரிமைகள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.”
“இந்தியாவின் 36 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவிலான குற்றச் செயல்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் ஏற்கனவே விளக்கியுள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காகச் சொல்லப்படும் பொய்கள் மக்கள் மத்தியில் எடுபடாது.”
இந்த ஆய்வின்போது வீட்டுவசதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

