இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ‘யெஸ்’ வங்கி ரூ. 3 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. இந்தக் கடனை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு நிறுவனம்) அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பணமோசடி செய்ததாக 2 வழக்குகளை பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் வங்கி கணக்குகளில் தணிக்கை மேற்கொண்டதில், ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் வாங்கிய கடன் தொகையை வேறு நோக்கங்களுக்கு தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்நிலையில், அனில் அம்பானி குழுமம் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பணமோசடி செய்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் அனில் அம்பானி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், “விசாரணை தொடங்கியதிலிருந்து இப்போது வரை நான் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாடு செல்ல வேண்டுமானால் கோர்ட்டின் அனுமதி பெற்று செல்வேன். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பேன்” என உறுதி அளித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சமீபத்தில் அமலாக்கத் துறை ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியது. இதன்படி அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

