திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினர் தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்று தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் அதிகம் இருக்கக்கூடிய சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தரைக்கடை வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கவும், தொடர்ந்து நகர விற்பனைக்குழு உறுப்பினர்களை தேர்தல் நடத்தி தேர்வு செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நீண்ட காலமாக தரைக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பலருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை எனவும், வியாபாரிகள் அல்லாத பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், எனவே தரைக்கடை வியாபாரிகள் பட்டியலை முறைப்படுத்தி அடையாள அட்டை வழங்கிய பிறகு, நகர விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் நடத்த வேண்டும் என தரைக்கடை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்க ளுக்கு தொடர்ந்து மனு அளித்ததுடன், போராட்டங்களும் மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
(வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.