Skip to content

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் இன்று நடைபெற்றது.

மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இத்தனை நாள்களாகக் கொளுத்திய வெயில் இனி, படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம். புராணத்தில், அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனால்,

பெரும்பாலான கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறும்

சுவேதசி என்ற மன்னனுக்காகத் துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானார் அக்னி பகவான். அதனால், அவரை மந்த நோய் தாக்கியது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் உள்ள காண்டவ வனத்தை எரித்த நாள்களே அக்னி நட்சத்திர நாள்களாகப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன. அக்னி பகவான் முதல் ஏழு நாள்கள் வனத்தில் உள்ள மூலிகைகளை எரித்தார். அடுத்த ஏழு நாள்கள் மரங்களை உணவாகக் கொண்டார். அடுத்த ஏழு நாள்கள் எஞ்சியவற்றை உண்டு விடைபெற்றுச் சென்றார். இதனால், இந்த அக்னி நட்சத்திர காலம் தோஷமானவை என்று கருதி, சுப காரியங்களைத் தவிர்த்துவிடுவார்கள்.

அதன்பிறகு வெயில் படிப்படியாக அதிகரித்து 21-ம் நாள் உச்சத்தைத் தொடும். பிறகு, படிப்படியாக வெயில் குறையத் தொடங்கும். அக்னி நட்சத்திர தோஷ காலம் முடியும் நாளிலும், அதன்பிறகும் எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இதை அக்னி கழிவு என்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி என்றும் கொண்டாடுவார்கள். இந்த நிவர்த்தி பூஜை மற்றும் மகா அபிஷேகத்தின்போது இறைவனை வணங்கினால் நம் தோஷங்களும் அனைத்தும் விலகும்; வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதிகம்.

இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி முன்னிட்டு மகாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு செண்பகம், சரக்கொன்றை மற்றும் பல வகையான வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பல்வேறு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாதரணை நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!