பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக பேசிய சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதற்காக கடந்த செப்.7ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து மகாவிஷ்ணுவை, சென்னை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நான்காவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியம் அனுமதி வழங்கினார். அதன்பேரில் போலீஸார் அவரை திருப்பூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது அலுவலகம் , வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஹார்ட் டிஸ்குகள், பென்டிரைவ் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி மகாவிஷ்ணு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.