முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு முழுமையாகப் பணமாகக் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ, சசிகலாமீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட்டு மாதத்தில் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே சசிகலா மீதான பணமோசடி, வரி ஏய்ப்பை வழக்கை விசாரித்து வரும் வரித்துறை பிறப்பித்த 2020ம் ஆண்டின் உத்தரவை மேற்கோள்காட்டி சசிகலா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் ரூ.450 கோடி பணமாக கொடுத்து சர்க்கையை ஆலையை வாங்கியது தொடர்பாக, பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி விவகாரங்களை நிர்வகித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், சத்தியப்பிரமாணமாக அளித்த வாக்குமூலத்தில், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக மொத்தமாக ரூ.450 கோடியை பழைய ரூபாய் நோட்டுகளாகப் பெற்றதாகவும், அதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) உருவாக்கப்பட்டது என்றும் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை (FIR) யில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தனது தந்தையான ஷிவ்கன் படேல் மற்றும் அவரது சகோதரர் தினேஷ் படேல் ஆகியோருடன் இணைந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறியுள்ளார். அதன் பின்னர், வருமான வரித் துறை அந்த சர்க்கரை ஆலையைப் பினாமி சொத்து என்று அறிவித்து, சசிகலாவை அதன் உண்மையான உரிமையாளராகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட இயக்குநர்களான ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் ஷிவ்கன் படேல், தம்பூராஜ் ராஜேந்திரன், பாண்டிய ராஜ் மற்றும் தலைமை நிதி அதிகாரி வெங்கட பெருமாள் முரளி ஆகியோரை குற்றவாளிகளாகப் பட்டியலிட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும், கடன் வாங்கிய பணத்தின் இறுதிப் பயன்பாட்டை மறைக்க, போலி அல்லது பினாமி நிறுவனங்களுக்குப் பணத்தை மாற்றியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. தற்போது அதிமுகவில் எழுந்துள்ள சலசலப்புக்கு மத்தியில், சசிகலா மீதான வழக்கும் தற்போது தீவிரமடைந்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.