2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என கட்சியின் பெயரை அறிவித்த வி.கே.சசிகலா, கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கொண்ட கொடி மற்றும் தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், வி.கே.சசிகலாவின் இந்த கட்சியின் சார்பாக போட்டியிட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு அளிப்பதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோருவோர் இன்று காலை 11 மணி முதல் விருப்ப மனுவை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, வி.கே.சசிகலா வெளியிட்ட அறிவிக்கையில், ”18-03-2026 புதன் கிழமை அன்று காலை 11.00 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பப் படிவங்களை போயஸ் கார்டன், ஜெயலலிதா இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விருப்ப மனுவிற்கான கட்டண விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் போட்டியிட பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000, தனித்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, புதுச்சேரியில் போட்டியிட பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3,000 மற்றும் தனித்தொகுதிக்கான கட்டணம் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

