மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் தனியார் வாகனத்தில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று திருக்கடையூரில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு சென்ற தனியார் வாகனம் அனந்தமங்கலம் மெயின் ரோடு என்.என் சாவடி பகுதியில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வேப்ப மரத்தில் மோதி யுடர்ன் அடித்து திரும்பியது. அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பொறையார் சர்ச் தெருவை சேர்ந்த ராஜா பெயிண்டர், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உதவியாளர் காபீரியல் மீது
வேன் மோதியது. விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து பலியானார். காபீரியல் படுகாயங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காயங்கள் இன்றி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு ராஜா உடலை பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர். மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வாகனம் விபத்தில் சிக்கியது அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.