அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் ’96’ படத்தில் நடித்து பிரபலமான கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் நாளை (நவம்பர் 9) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஒரு யூடியூபர் நடிகரிடம் “நடிகையைத் தூக்கியுள்ளீர்கள், அவரது எடை எவ்வளவு?” என்று கேட்டது பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியது.
இதை விமர்சித்து கௌரி கிஷன் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசியிருந்தார். அண்மையில் நடைபெற்ற மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், அதே யூடியூபர் உள்ளிட்டோர் மீண்டும் கௌரி கிஷனை டார்கெட் செய்யும் வகையில் கேள்விகள் எழுப்பினர். இதற்கு தைரியமாகப் பதிலளித்த கௌரி கிஷன், “உடல் எடை தொடர்பான கேள்வி உருவக் கேலி செய்வதற்கு சமம். இதே கேள்வியை நடிகரிடம் கேட்பார்களா? எனது கதாபாத்திரம் குறித்தோ முயற்சி குறித்தோ கேட்காமல் எடை பற்றி கேட்பது தவறு” என்று கடுமையாக விமர்சித்தார்.
அவரது துணிச்சலான பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்றது.கௌரி கிஷனின் பதிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், கவின் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும், தென்னிந்திய நட்சத்திர சங்கமும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சர்ச்சை மேலும் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் கௌரி கிஷன் அறிக்கை வெளியிட்டு, “உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் ஏற்றுக்கொள்ள முடியாது. யூடியூபரை குறிவைத்து விமர்சிக்க வேண்டாம். எனக்குக் கிடைத்த ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
சர்ச்சை தொடர்ந்த நிலையில், கேள்வி கேட்ட யூடியூபர் ஆர்.எஸ். கார்த்திக் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார். “நடிகை கௌரி கிஷன் மனதைப் புண்படுத்தும் நோக்கில் கேள்வி கேட்கவில்லை. அவர் எனது கேள்வியை தவறாகப் புரிந்துகொண்டார். வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் நடிகைகளுக்கு எதிரான உடல் அவமானக் கேள்விகள் குறித்து பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

