நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், இரு நாட்களுக்கு முன்பு சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவி கயல்விழியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். சீமான் ஆஜராவதை தொடர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 1 மணி நேரமாக சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையம் முன் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறதுழ.

