Skip to content

கொடுத்த பணத்தை திருப்பி தராததால் நண்பரை கொன்று குட்டையில் வீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மூலம் தனது நண்பரை கொலை செய்ததாக சரவணன் சரண் அடைந்தார்.  டர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சரவணனிடம் மேற்கொண்ட விசாரணையில், சரவணனின் காரில் அடிக்கடி பயணிக்கும் நண்பரான தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (35) என்பவர் சரவணனிடம் ஆறு லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். தொடர்ந்து சரவணன் பலமுறை பணம் கேட்டும் வினோத் தராததால் அவர் மீது சரவணன் ஆத்திரமடைந்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக பணிபுரிந்து வரும் வினோத்தை கடந்த 17ஆம் தேதி இரவு தொடர்பு கொண்ட சரவணன், மது அருந்த வருமாறு அழைத்துள்ளார். அதன்படி தனது காரில் வினோத்தை அழைத்துக் கொண்டு செட்டிபுண்ணியம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் காரில் அமர்ந்தபடி மது அருந்தி உள்ளனர். அப்போது வினோத்திடம் சரவணன் கொடுத்த ஆறு லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப கேட்டதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்தை குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் செட்டிப்புண்ணியம் கல்குவாரியில் தேங்கி நின்ற தண்ணீரில் உடலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று இரவு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் சரணடைந்த நிலையில் இன்று காலை செட்டி புண்ணியம் கல்குவாரியில் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதையடுத்து செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வினோத்தின் உடலை கல்குவாரியில் தேங்கி இருந்த நீரில் இருந்து மீட்டனர். தொடர்ந்து வினோத்தின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சரவணனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் நண்பனை கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசி சென்ற சம்பவம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!