Skip to content

நிழற்குடையில் தவெக வண்ணத்தில் செங்கோட்டையன் பெயர்: நள்ளிரவில் திரண்ட அதிமுகவினர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட கோசனம் பகுதியில், சுமார் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்தப் பணியின் இறுதியில், நிழற்குடையில் ‘கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ’ எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கட்சி வண்ணத்தில் பெயர் எழுதப்பட்டது.

இதையறிந்த அதிமுகவினர் நேற்று நள்ளிரவில் நம்பியூர் யூனியன் அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கூறுகையில், “தற்போது அவர் எம்.எல்.ஏ பதவியில் இல்லை. ஆனால், அவர் தவெகவில் இருந்தபோது கட்டப்பட்ட நிழற்குடை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் வகையில், திட்டமிட்டு தவெக வண்ணத்தில் அவரது பெயரை எழுதியுள்ளனர். நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதியோடுதான் இது நடந்துள்ளது. உடனடியாக இந்தப் பெயரை அழிக்காவிட்டால், அதிமுகவினர் திரண்டு வந்து பெயரினை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரித்தனர்.

தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே நிலவும் இந்த மோதல் போக்கால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் பதவி விலகிய ஒருவரின் பெயர் கட்சி வண்ணத்தில் எழுதப்பட்டிருப்பது மக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!