அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமான என ராமதாஸ் தரப்பு பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சி மறைமுகமாக 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. தந்தை மகனுக்கு இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவர பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் பலனில்லை. இந்த நிலையில், கடந்த ஆக.9ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அன்புமணி தலைமையில் பாமக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அன்புமணியின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தியதோடு , நீதிமன்றத்தையும் நாடியது. இருப்பினும் திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெற்றது.
இந்தச் சூழலில், அன்புமணி நடத்திய பொது குழுவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு பாமக செய்தி தொடர்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கட்சியின் நிறுவனரை அழைக்காமல் சட்ட விரோதமாக அன்புமணி பொதுக்குழுவை கூட்டி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் சூழலையே அன்புமணி மாசுபடுத்துகிறார் என்றும், அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்றும் தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கட்சி விதி 13ன் படி பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு கட்சி நிறுவனரே ஒப்புதல் தர வேண்டும் என்றும் , ஆனால் ராமதாஸ் கட்சி நிறுவனர், தலைவர் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக பதவி காலத்தை நீட்டித்துள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அன்புமணியிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும், கடந்த மே 30ஆம் தேதி முதல் பாமக நிறுவனர் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது