Skip to content

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரிகள்…..சரியாக செயல்படுகிறதா?… திருச்சி பொதுமக்கள் புகார்

  • by Authour

தமிழகத்தில்  சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்த பெரிய மாநகராட்சி திருச்சி.  தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரம்.

4வது பெரிய மாநகராட்சியாக இருந்தும்  திருச்சியில் இன்னும் பாதாள சாக்கடை பணி முழுமை பெறவில்லை.  இன்னும் பெரும்பாலான இடங்களில் செப்டிக் டேங்க்  நிரம்பினால் தனியார் மூலம் அவற்றை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

இங்கு தான் பிரச்னை.  திருச்சி மாநகரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதற்காக  ஏராளமான லாரிகள்   உள்ளன. இந்த லாரி உரிமையாளர்கள்  வீடு வீடாக சென்று  செப்டிக் டேங்க் நல்ல முறையி்ல் சுத்தம் செய்யப்படும், ஏர் கம்ப்ரசர் மூலம்  சுத்தம் செய்து தரப்படும்  என்ற விசிட்டிங் கார்டுகளை  வாசல்களில் போட்டு விட்டு செல்கிறார்கள்.

காலையில் எழுந்து பாா்த்தால்,  ஒவ்வொரு வீட்டு முன்பும்  5 விசிட்டிங் கார்டுகளாகவது கிடக்கிறது. இதில் ஒரு கார்டை எடுத்து தங்கள் வீட்டில்  செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யுங்கள் என்று கூறினால்,  அவர்களும் வந்து  சுத்தம் செய்வதற்கான கட்டணம் குறித்து பேசுகிறார்கள்.

2500 ரூபாய் கூலி, அத்துடன் 5 குளியல் சோப், ஒரு  சலவை சோப்,  5 பாட்டில் பினாயில் ஆகியவையும் கேட்கிறார்கள். இவற்றை வாங்கி கொடுத்தாலும்,   சிறிது நேரத்தில் லாரியின் டேங்கர் நிரம்பி விட்டது. உங்கள் வீட்டு செப்டிக் டேங்கில் இன்னும் அதிகமான அளவு  இருக்கிறது. அவற்றை சுத்தமாக  எடுக்க வேண்டுமானால்  லாரியில் உள்ளதை கொட்டிவிட்டு, இன்னுமொரு முறை வரவேண்டும். அதற்கு மேலும் 1500 ரூபாய் வேண்டும் என கேட்கிறார்கள்.

இவர்கள் சொல்வதை நம்பி வீட்டுக்காரர்களும்  மேலும் பணம் கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு வீட்டில் இருந்து செல்லும் லாரி, அடுத்த வீட்டுக்கு சென்று அங்கு உள்ள  செப்டிக் டேங்கையும் இதே பாணியில் பாதி அளவு எடுத்துக்கொண்டு 3வது வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கும் மீண்டும் வருகிறோம் என மேலும் ரூ.1500 வசூலித்து விடுகிறார்கள்.

இப்படியாக செப்டிக் டேங்க்  சுத்தம் செய்வதில் பல  முறைகேடுகள் நடப்பதாக பாதிக்கப்பட்ட  மக்கள் கூறுகிறார்கள்.  இந்த டேங்கர் லாரிகளும் கழிவுகளை  மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதில்லை என்ற புகாரும் உள்ளது.

இத்தனைக்கும் செப்டிக் டேங்கர் லாரி வாங்க  அரசு  பெருமளவில் மானியம் கொடுக்கிறது. அதையும் பெற்றுக்கொண்டு  இவர்கள் இப்படி செய்யலாமா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.  செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரிகள் சரியாக செயல்படுகிறதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதை அவர்கள் கண்காணிக்காவிட்டால் இந்த புகார்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!