நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது. படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் இதுவரை வழங்கப்படாதது படக்குழுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதல்நாள் காட்சி முன்பதிவு தொடங்காததும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த அவசர மனுவில், பட வெளியீடு தாமதமாகும் அபாயம் உள்ளதாகக் கூறியுள்ளது.
விரைவில் வழக்கு விசாரிக்கப்பட்டு படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில், இத்தாமதம் குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் KS அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். “சென்சார் மட்டும் தரலேன்னா.. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அழகிரி, திமுக கூட்டணியில் இருப்பதால், இக்கருத்து அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் அரசியல் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், தாமதம் வேண்டுமென்றே என்ற சந்தேகத்தை தவெக தரப்பு எழுப்பியுள்ளது. இது தமிழ் சினிமாவில் அரசியல் தலையீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
சான்றிதழ் பிரச்னை தீர்க்கப்பட்டால் ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு உறுதியாக தெரிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், படத்திற்கு அதிக ஷேர் கோருவது போன்ற வேறு பிரச்னைகளும் இருந்தாலும், தணிக்கை தாமதமே முக்கிய இடையூறாக உள்ளது.

