Skip to content

பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

பள்ளப்பட்டி பகுதியில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி இ.பி. அலுவலகம் முன்புறம் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் தொடர்ந்து நிரம்பி சாலைப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இதனால் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் நாள்தோறும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

கடந்த ஒரு வருடமாக நீடித்து வரும் இந்த பிரச்சினையைப் பற்றி பலமுறை மனு அளித்தும், எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழை பெய்தாலோ, கழிவுநீர் அதிகரித்தாலோ சாலையில் பெரிய அளவில் தண்ணீர் நிறைந்து பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், இப்பகுதியில் உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!