உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு வினோதமான மோதல் அரங்கேறியுள்ளது. ஹம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஒரு பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், காதலர் தினமான இன்று அந்தப் பெண் தனது கள்ளக்காதலனுடன் பைக்கில் வெளியே சென்றுள்ளார். அவர்கள் மீரட் மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பெண்ணின் கணவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர்கள் இருவரையும் விரட்டிச் சென்ற கணவர், மேம்பாலத்தின் மீது வைத்து மடக்கிப் பிடித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவனுக்கும், மனைவியின் கள்ளக்காதலனுக்கும் இடையே நடுரோட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த மேம்பாலத்தில் நடந்த இந்த மோதலைக் கண்டு வாகன ஓட்டிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆனாலும், தொடர்ந்து சண்டையிட்டதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் இளம்பெண், அவரின் கணவன், கள்ளக்காதலன் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், 3 பேரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

