நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை தரமாக புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 6 மணி முதல் நாளை (12-ம் தேதி) காலை 6 மணி வரை 24 மணி நேரம் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்கள், ஜீப்புகள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் தொகுதிக்குட்பட்ட கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் மற்றும் மசினகுடி ஊராட்சி, நடுவட்டம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டது. இதனிடையே கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மாவட்ட அளவிலான போராட்டத்திற்கு தயாராவோம் என கூடலூர் சட்டமன்ற தொகுதி வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார்.