நெல்லை பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு தனி பள்ளி தொடங்கப்பட்ட இடம் பாளையங்கோட்டை.
அத்தனை சிறப்பு வாய்ந்த பாளையங்கோட்டையில் தற்போது பிரபலமான பள்ளியாக விளங்குவது ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி. இங்கு இன்று 8 ம் வகுப்பு மாணவன் ஒருவனை சக மாணவன் அரிவாளால் வெட்டி விட்டான். இதில் மாணவனுக்கு 3 இடங்களில் லேசான காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த மாணவனும், ஆசிரியரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவனையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் . தாசில்தார் இசைவாணி, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவன் புத்தகப்பையில் அரிவாளை மறைத்து எடுத்து வந்ததாகவும், சில நாட்களுக்கு முன் தன்னிடம் வாங்கிய பேனாவை தராததால் அந்த மாணவனை வெட்டியதாக மாணவன் கூறியதாக உதவி கமிஷனர் சுரேஷ் கூறினார்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிக்கு வரும் மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனை செய்தே பள்ளிக்கு அனுமதித்து வருகிறார்கள். ஆனாலும் மாணவர்கள் அரிவாளை கொண்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.