சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய்த்துறை சார்பில் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. காலக்கெடு முடிந்தும் வீடுகள் காலி செய்யப்படாததால், முதற்கட்டமாக அந்த வீடுகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி இன்று காலை மின்வாரிய ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து மின் இணைப்புகளைத் துண்டித்தனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை – காளையார்கோவில் பிரதான சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டது.
அவர்களின் கோரிக்கையான “நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வழங்காமல், திடீரென மின்சாரத்தை துண்டிப்பது மனிதநேயமற்ற செயல்” எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் “நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது கட்டாயம்” என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
உரிய ஆவணங்கள் உள்ளவர்கள் மற்றும் மாற்று இடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர்.
இருப்பினும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்படாததால் அந்தப் பகுதியில் இன்னும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

