கர்நாடக மாநிலம் சிக்மகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவர் 14.8 கிலோ தங்க நகையை மறைத்து எடுத்து வந்ததால் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடிகை ரன்யாராவை பிடித்து விசாரித்த போது, தனது தந்தை ராமச்சந்திர ராவ் கர்நாடக போலீஸ் டிஜிபி என கூறினார். இருப்பினும் அதிகாரிகள் அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, தங்கம் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, மார்ச் 18-ம் தேதிவரை காவலில் எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ரன்யா ராவிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது, நடிகை ரன்யா ராவ் வணிக நோக்கத்துக்காக துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தேன் என்று கூறியதாக தெரிகிறது. கடந்த ஆண்டு மட்டும் 40-க்கும் மேற்பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், வரும்போதெல்லாம் பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்ததாக கூறியுள்ளார். துபாய் செல்லும்போதெல்லாம் ஒரே மாதிரியான உடையே அணிந்து சென்று வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் ரன்யா ராவ் ஒவ்வொரு முறையும் துபாய் சென்று வந்தபோது எப்படி சோதனையில் இருந்து தப்பினார்? அவர் அப்போதெல்லாம் என்ன மாதிரியான உடைகளை அணிந்திருந்தார்? அவரை சோதனை செய்ய விடாமல் ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் அழைத்து சென்ற காவல்துறை உயர் அதிகாரி யார்? எவ்வித சோதனையும் இல்லாமல் விஐபிகள் செல்லும் பாதையில் இவரை அழைத்து சென்றது எப்படி என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று பிற்பகலில் பெங்களூருவில் உள்ள நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்து ரூ.2.67 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இந்த பணம் கட்டுக்கட்டாக கட்டில் மெத்தைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல ரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், கடந்த ஒரே ஆண்டில் மட்டும் அவர் 40 முறையும், இந்த ஆண்டு இதுவரை 8 முறையும் அவர் துபாய்க்கு விமானத்தில் பறந்து சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகை ரன்யா ராவ், துபாய் சென்று வந்த போது எல்லாம், ஒரே ஆடையை மட்டுமே அணிந்து சென்று வந்துள்ளார். தங்கத்தை உடலில் பதுக்கி கடத்தி வருவதற்கு ஏற்ப அந்த ஆடையை அவர் பிரத்யேகமாக தயார் செய்து அணிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகை ரன்யா ராவ் மட்டும் இந்த தங்க கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பில்லை என்று நம்பும் அதிகாரிகள் இந்த கடத்தலில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். ஏனெனில் ரன்யா ராவ் கடத்தி வரும் தங்க கட்டிகளை வாங்கும் நபர்கள் யார் யார்?, துபாயில் தங்கம் வாங்க அவருக்கு பணம் வழங்கியது யார் யார்?, இந்த தங்க கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது குறித்து டில்லி வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரித்து உண்மைகளை அறியும் முயற்சியில் டில்லி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரன்யா ராவ். பொறியியல் பட்டதாரி. அவரது தாயார், காபி செடி விளைவிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வளர்ப்பு தந்தை ராமச்சந்திர ராவ், கர்நாடக காவல்துறையின் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக (டிஜிபி) உள்ளார்.
இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் கூறியதாவது: ‘‘எனக்கும் நடிகை ரன்யாராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களுக்குள் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை. 4 மாதங்களுக்கு முன்பு ரன்யா ராவுக்கு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஜதின் ஹுக்கேரியுடன் திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர் எங்களுடன் பேசுவதில்லை. அவருடைய கணவர் என்ன வேலை செய்கிறார் எனவும் தெரியாது. தங்கம் கடத்தியதாக வந்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தந்தது. அவர் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என்றார்.