அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் காவலர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த 2 பேரை மறித்து சோதனை செய்ய முயற்சித்தனர் . அப்போது நிற்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றவர்களை, போலீசார் துரத்தி சென்று பிடிக்க முயற்சித்தனர். குணமங்கலம் பிரிவு சாலை அருகே உள்ள வாய்க்காலில் மோட்டார் சைக்கிள்களையும் அதில் கொண்டு வந்த சாக்கு முட்டையும் போட்டு விட்டு, மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 4 உலோகத்திலான சாமி சிலைகளும், 1 பீடமும் என மொத்தம் 5 பொருட்கள் இருந்தது. சுமார் 1 அடி உள்ள 2 சாமி சிலைகளும், முக்கால் அடியில் ஒரு சிலையும், அரை அடியில் ஒரு சிலையும், சிலை வைப்பதற்கான ஒரு பீடம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். சாமி சிலைகளின் உருவங்களைக் கொண்டு அச்சிலைகளின் பெயர்களையும், செய்யப்பட்ட உலகம், இதன் மதிப்பு, சமீபத்தில் செய்யப்பட்டதா அல்லது புராண காலத்து சிலைகளா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலைகளை போட்டுவிட்டுச் சென்ற 2 மர்ம நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து இதனை திருடி வந்தார்கள்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.