கரூர் மாவட்டம் பழைய அரசு மருத்துவமனை சாலை மற்றும் சர்ச் கார்னர் கடைவீதிகளில் பகுதிகளில் அதிகமான முடி, தாடியுடன் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை இழந்து ஆதரவின்றி வாழ்ந்து வரும் முதியவர்களுக்கு மனிதநேயத்துடன் உதவி செய்து வரும் அன்பே சிவம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் சமூக சேவகர் பாக்கியராஜ் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
பல ஆண்டுகளாக சாலையோரங்களில் வசித்து வந்த சில முதியவர்கள் சுகாதாரமற்ற சூழலில் இருந்தனர். அவர்களுக்கு யாரும் கவனம் செலுத்தாத நிலையில், சமூகப் பொறுப்புணர்வுடன், அவர்களை அணுகி முதலில் அன்புடன் பேசிக் நம்பிக்கை ஏற்படுத்தினார். பின்னர் அவர்களுக்கு முடி திருத்தம் செய்து, நீண்ட தாடிகளை சவரம் செய்து, சுத்தமான நீரில் குளிக்க வைத்து, புதிய ஆடைகள் அணிவித்து வருகின்றனர்.
இதன் மூலம் அவர்களின் உடல் நலன் மட்டுமின்றி, மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர். பலர் அந்த முதியவர்களை நீண்ட நாட்களாக அதே தோற்றத்தில் பார்த்து வந்த நிலையில், இவ்வாறு சுத்தமாக மாற்றப்பட்டதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
இந்நிகழ்வு குறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாராட்டுத் தெரிவித்ததுடன், இதுபோன்ற மனிதநேய செயல்களில் மேலும் பலர் ஈடுபட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

