தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்தாா். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூரில் திமுகவினர்,பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திண்டிவனம் ரவுண்டானாவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காரில் இருந்து கீழே இறங்கி கையசைத்தவாறும், வணக்கம் தெரிவித்தபடியும் நடந்தார். அப்போது சாலையின் இருபுறமும் நின்ற மக்களிடம் குறைகளை கேட்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.
2-ம் நாளான இன்று கள ஆய்வில் விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் நினைவாக ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஏ.கோவிந்தசாமியின் வெண்கல சிலைக்கு முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவு அரங்கம், மணிமண்டபத்தை பார்வையிட்டார்.
மணிமண்டபத்தில உள்ள 21 போராளிகளின் சிலைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர். போராளிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். 21 போராளிகளின் வாரிசுதாரர்களுடன் முதல்வர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சிவசங்கர், ராஜேந்திரன், சாமிநாதன், கணேசன் மற்றும் ஜெகத்ரட்சகன் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மணிமண்டபம் அருகில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ரூ.133 கோடி மதிப்பில் 116 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.324 கோடியில் 35ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.