Skip to content

இந்திய மண்ணில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி

  • by Authour

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 26/0 ரன் எடுத்து, 314 ரன் முன்னிலை பெற்று இருந்தது.

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பந்துவீச்சு எடுபடாததால், முதல் விக்கெட்டுக்கு மார்க்ரம், ரிக்கிள்டன் 59 ரன் சேர்த்தனர். ஜடேஜா ‘சுழலில்’ ரிக்கிள்டன் (35), மார்க்ரம் (29) வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் வலையில் கேப்டன் பவுமா (3) சிக்கினார். ஜோர்ஜி, ஸ்டப்ஸ் சேர்ந்து அதிரடியாக ஆடினர். நான்காவது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்தனர். ஜடேஜா பந்தில் ஜோர்ஜி (49) அவுட்டானார். பின் 5வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ்-முல்டர் 82 ரன் சேர்த்தனர். ஜடேஜா பந்தில் போல்டான ஸ்டப்ஸ் (94 ரன், 9X4, 1X6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை 260/5 ரன்னுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. முல்டர் (35) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியாவுக்கு 549 ரன் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
 

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க பேட்டர்கள் ஏமாற்றினர். யான்சென் ‘வேகத்தில்’ ஜெய்ஸ்வால் (13) நடையை கட்டினார். ஹார்மர் ‘சுழலில்’ ராகுல் (6) போல்டானார். நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 27/2 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் (2), ‘நைட்வாட்ச்மேனாக’ வந்த குல்தீப் யாதவ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த நிலையில், கடைசி நாளான இன்று ஒருநாள் தாக்குபிடித்தால், போட்டியை டிரா செய்து, தொடரையும் சமன் செய்து விடலாம் என்ற சூழலில், இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்சை போலவே இந்திய பேட்டர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
 

ஜடேஜா மட்டும் தாக்கு பிடித்து (54) அரைசதம் அடித்தார். எஞ்சிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி 140 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 408 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் ஹார்மர் 6 விக்கெட்டையும், மகாராஜ் 2 விக்கெட்டையும், மார்கோ, முத்துச்சாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி, 25 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் தொடரை வென்றுள்ளது.

error: Content is protected !!