Skip to content

SPB நினைவு நாள் .. உன்னை நினைக்காத நாளில்லை…வைரமுத்து எமோஷனல்!

இன்று (செப்டம்பர் 25, 2025) புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் (SPB) நினைவு நாளையொட்டி, ரசிகர்கள் பலரும் அவர் பாடியதில் மறக்க முடியாத பாடல் என்னவோ அந்த பாடல்களை பகிர்ந்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்களும் அவருடைய மறைவு நாளையொட்டி சமூக வலைத்தளங்களில் அவருடன் இருந்த நினைவுகள் குறித்து எமோஷனலாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ” பாசமுள்ள பாட்டுக்காரா! நினைவு நாளில் அல்ல உன்னை நினைக்காத நாளில்லை நீ பாடும்போது உடனிருந்த நாட்கள் வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்

‘பொன்மாலைப் பொழுது’ உன் குரலின் அழகியல் வசீகரம் ‘சங்கீத ஜாதிமுல்லை’ கண்ணீரின் திருவிழா ‘காதல் ரோஜாவே’
கவிதைக் கதறல் ‘வண்ணம்கொண்ட வெண்ணிலவே’ காதலின் அத்வைதம் ‘பனிவிழும் மலர்வனம்’ சிருங்காரச் சிற்பம் ‘காதலே என் காதலே’ தோல்வியின் கொண்டாட்டம்

ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள்ளிருந்த நடிகனைக் கரைத்துக் குழைத்துப் பூசியிருப்பாய் உன் வரவால் திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால் வெள்ளாடை சூடி நிற்கிறது” எனவும்” வைரமுத்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவு, எஸ்.பி.பி.யின் இசை மற்றும் உணர்வு நிறைந்த குரலுக்கு வைரமுத்து செலுத்தும் மரியாதையாக அமைந்துள்ளது. தமிழ் திரையிசை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பி.யின் நினைவை இன்று திரையுலகமும் ரசிகர்களும் ஒருமித்து அனுசரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!