108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வைபவங்கள் நடைபெற்று வருகிறது – இதில்
நம்பெருமாளுக்கு நடைபெறும் ஜேஸ்டாபிஷேகம் பழங்காலம் தொட்டு நடைபெறும் முக்கிய விழாவாகும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலவர் ரங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டது – இதனால், மூலவர் ரங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை – இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர் – இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கநாதரின் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர் – இவ்வாறு தைலக்காப்பிடும் நாட்களில் பெருமாளை அலங்கரித்திருக்கும் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு திருவடி தொடங்கி திருமுடிவரை தைலம் பூசப்படும். தைலம் பூசுவதற்காக பெருமாளின் மீதிருக்கும் வஸ்திரம் மற்றும் நகைகள் அகற்றப்பட்டுவிடுவதால் பெருமாளின் மார்புக்குக் கீழே திருவடி வரையுள்ள உள்ள பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும். ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1
மண்டல காலம் வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும். மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது என்பதால் உற்சவர் நம்பெருமாளுக்கு ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.
ஸ்ரீரங்கத்தில் நம்ப பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து யானையின் மீது தங்க குடத்திலும் – வெள்ளி கூடத்திலும் புனித நீர் எடுத்து வரப்பட்டது – பின்னர் முறைப்படி நம்பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம் நடைபெற்றது.