டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் பொறுப்பேற்றார்.
சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைப் போட்டித்தேர்வுகள் கடந்த 9-ஆம் தேதி காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்தது. ஆனால், அதற்கான நுழைவுச் சீட்டுகளை வழங்குவதில் நடந்த குளறுபடிகளால் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் 18 ஆயிரம் தேர்வர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த அ.சண்முகசுந்தரம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருப்பதாகவும், அவருக்கு பதில் புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் செயலாளராக பணியாற்றி வந்த வெங்கடப்பிரியா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பு கூறியது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐஏஎஸ் பொறுப்பேற்றார். குரூப் 2 2ஏ தேர்வு குளறுபடி காரணமாக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்ட நிலையில் பிப்.14ஆம் தேதி வெங்கடபிரியா பொறுப்பேற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

