Skip to content

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா நாளை நிறைவு – 2.5 லட்சம் பேர் தரிசனம்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘நம்மாழ்வார் மோட்சம்’ இன்று (ஜன.9) நடைபெற்றது. நாளையுடன் (ஜன.10) இவ்விழா நிறைவடைகிறது.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல் பத்து உற்சவம் 20-ம் தேதி தொடங்கியது. இவ்விழா நாட்களில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கடந்த டிசம்பர் 29-ம் தேதி மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) நம்பெருமாள் அருள் பாலித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் ‘சொர்க்கவாசல் திறப்பு’ கடந்த டிசம்பர் 30-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இதுவரை சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பரமபத வாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று (ஜன.8), தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி காலை 9 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், பரமபத வாசல் வழியாகச் சந்திர புஷ்கரணியை அடைந்தார். அங்கு நம்பெருமாள் சார்பில் தீர்த்தபேரர் எனப்படும் சின்ன பெருமாளுக்குத் தீர்த்தவாரி நடைபெற்றது.

நம்மாழ்வார் மோட்சம்: இன்று (ஜன.9) அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையும், திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 6 மணியளவில் ‘நம்மாழ்வார் மோட்ச வைபவம்’ பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பின்னர், காலை 9.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், 10.30 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நாளை நிறைவு: நாளை (ஜன.10) அதிகாலை 4 மணிக்கு இயற்பா சாற்றுமுறையுடன் 22 நாட்கள் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா இனிதே நிறைவடைகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

error: Content is protected !!