இந்தியாவில் கிறிஸ்தவ சமயத்தை முதன் முதலில் பரப்பியவர் இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா. கி.பி.52-ம் ஆண்டில் கேரள கடற்கரைக்கு வந்து, கேரளாவில் தன்னுடைய மிஷனரி பணியை தொடங்கினார். பின்னர், மேற்கு கடற்கரை பகுதிக்கும் சென்றார்.
இறுதியாக கி.பி. 72-ம் ஆண்டு சென்னை பரங்கிமலையில் தற்போதுள்ள புனித தோமையார் மலையில் கொல்லப்பட்டார். 300 அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் மீது போர்த்துக்கீசிய மறைப் பணியாளர்கள் 1523-ம் ஆண்டு, சிறிய கோவில் ஒன்றை கட்டினார்கள். பிறகு அது பெரிய தேவாலயமாக கட்டப்பட்டது. இந்த நிலையில் புனித தோமையார் மலை தேவாலயத்தை உலக புகழ் பெற்ற தேவாலயமாக போப் ஆண்டவர் அறிவித்துள்ளார்.
இதற்கான விழா இன்று (வியாழக்கிழமை) ஆலய வளாகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வாடிகனுக்கான இந்திய தூதர் லியோபோல்டோ கிரெல்லி, ஐதராபாத் பேராயர் அந்தோணி கார்டினல் பூலா, மும்பை முன்னாள் பேராயர் ஆஸ்வால்டு கார்டினல் கிராசியஸ், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, புதுச்சேரி-கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், புனித தோமையார் மலை பங்கு பேரவை தலைவர் சார்லஸ், அதிபர் மைக்கேல் ஆகியோர் வழங்கினார்கள். அப்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உடன் இருந்தார். இந்த விழாவையடுத்து, புனித தோமையார் பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ம் தேதி வரை நடக்கிறது.