சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடத்திற்கு அழைத்து வரப்படும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசிகளை செலுத்தி, மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக, தனி காப்பகங்கள் அமைத்து பராமரிப்பது தொடர்பாக விரிவான திட்டத்துடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்ட நீதிபதிகள், தெருநாய் பிரச்சினை என்பது மிகவும் தீவிரமானது, ரேபீஸ் நோய் தாக்கிய நாய்கள் எங்கு பராமரிக்கப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு தனி காப்பகங்கள் அமைக்க உள்ளதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்படி காப்பகங்கள் அமைக்கப்பட்டாலும், அங்குள்ள நாய்களுக்கு உணவளிக்க செல்வதற்கு யாருக்கு தைரியம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற நாய்களை கையாள வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்தால் மிருகவதை தடை சட்டத்தை சுட்டிக்காட்டி தொண்டு நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்யும் என்று குறிப்பிட்டனர்.
இதையடுத்து, “வெளிநாடுகளில் தெருநாய்கள் பிரச்சனை எவ்வாறு கையாளப்படுகிறது? என்ன தீர்வு காணப்பட்டுள்ளது? என்பதை தெரிந்து கொண்டு அதை நாம் பின்பற்றலாம் என்ற யோசனையை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.