தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி மசோதாக்களை கிடப்பில் போடுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் அதிகபட்சமாக 3 மாதங்களில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதேபோன்று ஆளுநர் விவகாரத்தில் கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது.
.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த ஆளுநர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தங்களுக்கும் பொருந்தும் என்பதால் மனுவை திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு கோரிக்கை வைத்தது. இதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மனுவை திரும்பப் பெற கேரள அரசு கோருவதாக தெரிவித்த நீதிபதிகள், ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். இதன் பின்னர் கேரள அரசின் வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.