பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த , ‘ஆபரேஷன் சிந்துார்’ தொடர்பான செய்திகளை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தவர்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி, அவர் குஜராத்தை சேர்ந்தவர். இவரது கணவரும் ராணுவத்தில் இருக்கிறார். இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.
இந்த நிலையில், ம.பி., பாரதிய ஜனதா பழங்குடி நலத்துறை அமைச்சர் விஜய் ஷா, இந்துாரில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை சுட்டிக்காட்டி, அவரை பாக்., மற்றும் பயங்கரவாதிகளின் சகோதரி என்ற ரீதியில் குறிப்பிட்டார்.
அவர் பேசுகையில், ‘நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களது சகோதரியை கொண்டே பழி வாங்கி விட்டோம். நம் மக்களை கொன்று குவித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியையே ராணுவ விமானத்தில் அனுப்பி, நம் பிரதமர் மோடி பதிலடி கொடுத்து விட்டார்’ என்றார்.
விஜய் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘கர்னல் சோபியா பற்றி, மலிவான, வெட்கக்கேடான கருத்துகளை விஜய் ஷா தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் பிரதமர் மோடி நீக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். இதையடுத்து, தன் பேச்சுக்கு விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார். 10 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என்றார்.
இதற்கிடையே விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மத்திய பிரதேச ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என விஜய்ஷா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் அமைச்சர் இப்படி பேசுவதா? அந்த எப்ஐஆரில் போதிய விவரம் இல்லாததால் அந்த வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும். உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் எப்ஐஆரில் இருக்க வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.
1