நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாகச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் முறையாகச் செயல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாழ்வுரிமை என்பது மாதவிடாய் காலத்தில் உடலைச் சுகாதாரமாகப் பராமரிப்பதையும் உள்ளடக்கியது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மட்கும் தன்மையுடைய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்குவது கட்டாயம் என்று தெரிவித்தனர். மேலும், மாணவிகளுக்கெனப் போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய தனிக் கழிப்பறைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், அத்தகைய வசதிகள் செய்து தராதது கல்வி பெறும் உரிமையை மீறும் செயலாகும் என்றும் குறிப்பிட்டனர். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அங்குள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தே அளவிடப்படுகிறது என்றும், கல்வி நிறுவனங்கள் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 19-ன் படி மாணவிகளின் சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்த கொள்கையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த இணக்க அறிக்கையை அடுத்த 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மாணவிகளின் கல்வி மற்றும் சுகாதார உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

