Skip to content

நடத்தையில் சந்தேகம்: போதை கணவரின் தலையில் குழவி கல்லைப் போட்டு கொன்ற மனைவி

சேலம் அம்மாபேட்டையில் நடத்தையில் சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்து வந்த போதை கணவரின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த மனைவியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கம் (40). டேப் கட்டில் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பத்மா (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தங்கம் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வையாபுரி உடையார் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு, தங்கம் போதையில் தகராறு செய்து மனைவியை அடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி நஞ்சம்பட்டியில் வசித்து வந்த தங்கத்தின் தாயார் காலமானார். இதனால் தங்கத்தின் மனைவி பத்மா அடிக்கடி நஞ்சம்பட்டிக்கு சென்று வந்துள்ளார். ஆனால் தனது மனைவி உறவினரை பார்க்க செல்வதால் சந்தேகப்பட்டு நேற்று இரவு போதையில் தங்கம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனைவி பத்மாவை அடித்து உதைத்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் ஆத்திரத்தில் இருந்தார். நடத்தையின் மீது சந்தேகப்பட்டு போதையில் தினமும் சித்ரவதை செய்வதை தாங்கி கொள்ள முடியாததால் கோபத்தில் நள்ளிரவில் குழந்தைகள் தூங்கிய பின், தூங்கி கொண்டிருந்த கணவர் மீது வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து தலையில் போட்டார்.

இதில், தங்கம் தலை நசுங்கி ரத்தம் வெள்ளத்தில் துடித்துடித்து இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கணவரை கொலை செய்த பத்மாவை கைது செய்தனர். விசாரணையில், நடத்தையில் சந்தேகப்பட்டு போதையில் கணவர் தங்கம் தினமும் அடித்து வந்துள்ளார். கணவரின் சகோதரர், உறவினர்களுடன் தகாத உறவு இருப்பதாக அடிக்கடி குற்றம்சாட்டி வந்ததுடன்,போதையில் தாக்கியுள்ளார்.

கணவரின் டார்ச்சர் தங்க முடியாததால் போதையில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!