அமாவாசை தினத்தில் விரதம் கடைபிடித்து முன்னோர்களுக்க தர்ப்பணம் கொடுப்பது மரபு. ஒவ்வொரு மாதமும் இந்த சடங்குகள் நீர்நிலைகளில் நடைபெறும். மற்ற மாதங்களில் தர்ப்பணம் கொடுக்காமல் விட்டு விட்டவர்கள் கூட தை, ஆடி , புரட்டாசி மகாளய அமாவாசை தினங்களில் அமாவாசை கொடுத்தால் அனைத்து மாதங்களிலும் தர்ப்பணம் கொடுக்கப்பட்டவதற்கு ஈடாகும் என்பதால் தை அமாவாசை சிறப்பு வாய்ந்தது.
இந்த அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தை அமாவாசை நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே ந்டந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்த சடங்குகள் நடந்து வந்தபோதிலும் காவிரி மாவட்டங்களில் இது சிறப்பாக நடந்து வருகிறது. இன்று அதிகாலை முதல் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பண சடங்குகள் நடந்து வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் திரண்டு வந்திருந்தனர். தர்ப்பண சடங்குகள் முடிந்ததும் மக்கள் காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். இதனால் திருச்சியில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதுபோல தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் கல்லணை, முக்கொம்பு உள்பட காவிரி நதிக்கரை முழுவதும் இன்று மக்கள் காவிரியில் நீராடி, தர்ப்பண சடங்குகள் நடத்தினர். அதுபோல கும்பகோணம் மகாமக குளம், திருவாரூர் கமலாலய குளம் ஆகிய இடங்களிலும் தர்ப்பண சடங்குகள் நடந்தது.
காவிரியில் தற்போது குறைந்த அளவு தண்ணீர் ஓடிக்கொண்டு இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர். இதுபோல குளித்தலை, முசிறி, மோகனூர், பாவனி கூடுதுறை, மேட்டூர், ஒகேனக்கல் ஆகிய இடங்களிலும் காவிரியில் மக்கள் தர்ப்பண சடங்குகள் நடத்தி நீராடினர்.
இதுபோல வேதாரண்யம் கடல், ராமேஸ்வரம் கடலிலும், இன்று பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக ராமேஸ்வரத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரைகளிலும் இந்த சடங்குகள் வழக்கம் போல நடந்து வருகிறது.
.

