சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாளை 14.10.2025 முதல் 17.10.2025 வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெறலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடி மறைந்த முன்னாள் 8 எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயர சம்பவம், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, வால்பாறை உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து, 16, 17, 18 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும். அப்போது, 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் அளிக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். கேள்வி நேரம் முடிந்ததும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். கடைசி நாளில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்று இவ்வாறு அவர் கூறினார்.