Skip to content

கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு… தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் மாளிகையில் , ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் பங்கேற்க அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஆளுநர் மாளிகை சார்பாக அழைப்பு விடுக்கப்படும். அந்தவகையில் நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளது. ஆனால் கலைஞர் பெயரிலான பல்கலை. மசோதாவுக்கு ஒப்புதல் தராததைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை  வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி  குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும்,  சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!