தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மெகா விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி (13.02.2026) மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார்.
விருது பட்டியல் விவரம்:
- திரைப்படங்கள் (2016-2022): சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- சின்னத்திரை (2014-2022): சிறந்த கதாநாயகர்களாக பாண்டியராஜன், கிருஷ்ணா, சஞ்சீவ் உள்ளிட்டோரும், கதாநாயகிகளாக ராதிகா சரத்குமார், வாணி போஜன், ரேவதி, சைத்ரா உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அழகி, நந்தினி, செம்பருத்தி, எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- மாணவர் விருதுகள்: எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2015 முதல் 2022 வரையிலான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரிசு விவரங்கள்: சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. சின்னத்திரை விருதுகளுக்கும் இதேபோல் ரொக்கப்பரிசு மற்றும் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர் விருதுக்குத் தேர்வானவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது.

