தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர் பதவிக்கு நியமனங்கள் நடந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் நியமனத்தை அறிவிக்க நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தஞ்சை வந்தார். இதற்கான நிகழ்ச்சி தஞ்சையில் ஒரு தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தற்போதைய மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒரத்தநாட்டை சேர்ந்த கர்ணன், உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் என நான்கு பேர் போட்டியிட்டனர்.
ராமசேதுபதி இருந்து தேர்தலை நடத்தினார். தேர்தல் முடிவுகளை அறிவிக்க மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வந்திருந்தார். மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், இணை தேர்தல் அதிகாரி பஞ்சாட்சரம், மாவட்ட தேர்தல் பார்வையாளர் முரளிகணேஷ், நிர்வாகி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் மாவட்ட தலைவர் பதவிக்கு மீண்டும் ஜெய்சதீஷ் பெயர் அறிவிக்கப்பட்டது.
மீண்டும் ஜெய் சதீசை தலைவராக அறிவித்ததால் ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியவாறே அமைச்சர் முருகன் இருந்த மேடையில் ஏறினர்.
அப்போது ஜெய்சதீஷ் ஆதரவாளர்களும் கோஷம் போட்டபடியே மேடையை நோக்கி வந்தனர். இரண்டு தரப்பினரும், ஒருவரை ஒருவர் எதிர்த்து கோஷங்கள் தொடர்ந்து எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது. அமைச்சர் முருகன் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் கோஷம் போடுவதை விடவில்லை. சுமார் 10 நிமிடம் கழித்து அவர்களாகவே கோஷத்தை நிறுத்திக்கொண்டனர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தனர். அதன் பின்னர் சலசலப்பு ஓய்ந்தது. மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.