தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த எட்டுப்புலிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த 24ம் தேதி அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவரும் பாஸ்கர் (53) என்பவர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி வீட்டுக்குச் சென்றவுடன் இது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் மாலை திடீரென பள்ளி முன்பு மற்ற பள்ளி மாணவ, மாணவிகள், அவரவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசாரை பெற்றோர்கள் முற்றுகையிட்டு அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் ஆசிரியர் பாஸ்கரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து சிறுமியின் தாயார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், சம்பவத்தன்று ஆசிரியர் பாஸ்கர் அந்த சிறுமியை அவரது அருகில் நின்று பாடத்தை படிக்கச் சொன்னதாகவும், சிறுமி படித்துக் கொண்டிருக்கும் போது ஆசிரியர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இந்த விஷயத்தை அந்த சிறுமி சக தோழிகளிடம் கூறியபோது இதே போல் இந்தப் பள்ளியில் பயிலும் மற்ற 6 குழந்தைகளிடம் நடந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தை அறிந்தவுடன் மற்ற ஆசிரியர்கள் மூலம் பள்ளியின் தலைமையாசிரியை விஜயாவிடம் (55) தெரியப்படுத்தியபோது, சம்மந்தப்பட்ட ஆசிரியர் பாஸ்கரை வேறு வகுப்பிற்கு மாற்றம் செய்திடலாம் என்று கூறி எங்களை அனுப்பி வைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து இது குறித்து மீண்டும் தலைமையாசிரியையிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பேசினார். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் பாஸ்கர் (53) மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தலைமையாசிரியை விஜயா கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதப்படுத்தியதால் தலைமையாசிரியை விஜயாவும் (55) கைது செய்யப்பட்டார்.

