செப்டம்பர் 20, 2025 அன்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி, தமிழக அரசின் கல்வித்துறை முன்னேற்றத்தையும், ஆசிரியர்களின் முக்கிய பங்களிப்பையும் வெளிப்படுத்தியது. விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆசிரியர்களின் பொறுப்பு குறித்து விரிவாகப் பேசினார். “ஆசிரியர்கள் வெறும் பாடங்களை மட்டும் கற்பிப்பவர்கள் அல்ல எனவும் அவர்கள் தங்கள் அனுபவங்களையும், அறிவையும் பகிர்ந்து, மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள். மாணவர்களிடையே சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்கு எண்ணங்களை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டின் அரசு பள்ளி மாணவர்கள் மாநிலத்தின் பெருமையாக திகழ்வதாகவும், அவர்களை வழிநடத்துவது ஆசிரியர்களின் கடமை என்றும் கூறினார்.முதலமைச்சர், தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும் பேசினார். “எதையும் கூகுள் அல்லது AI-இடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் மாணவர்கள் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள், மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை வளர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் அறிவார்ந்த தகவல்களோடு, தேவையற்ற குப்பைகளும் நிறைந்துள்ளன. தொழில்நுட்பத்தை குறைகூறாமல், அதிலிருந்து தேவையானவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
தொழில்நுட்பம் மனித சந்ததிக்கு வேறுபாட்டை உணர்த்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார். அமைச்சர் அன்பில் மகேஸ், “பள்ளிக்கல்வித்துறை சாதியை ஒழிக்கும் கட்டடங்களாக செயல்படுகிறது. ‘அன்பு கரங்கள்’ திட்டத்தின் மூலம் பல முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
மேலும், “பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்,” என்று அறிவித்தார். “ஆசிரியர்களுக்கு 6 மாதத்தில் பொதுத்தேர்வு, எங்களுக்கு பொதுத்தேர்தல். இருவரும் வெற்றி பெற வேண்டும்,” என்று உற்சாகமூட்டினார். இந்த 2,715 ஆசிரியர்களின் இணைப்பு, கல்வித்துறையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த முப்பெரும் விழா, தமிழக கல்வித்துறையின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது.