தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வேண்டுமென கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி எண் 181-இல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிடும்படியாக, எதிர்க்கட்சியாக இருந்தபோது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம். வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி நெற்றியில் ‘181‘ என எழுதி ஆசிரியர்கள் நூதன போராட்டம்; பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

