தென்காசி மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர்.
விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்களும், போக்குவரத்து போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க 25-க்கும் அதிகமான 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன. காயமடைந்தவர்கள் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.விபத்துக்கான முக்கிய காரணம் அதிவேகம் மற்றும் ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி சென்ற பேருந்தும், எதிர்த்திசையில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை சென்ற பேருந்தும் நெடுஞ்சாலையின் நடுவரைபகுதியில் மோதியுள்ளன. இரு பேருந்துகளும் பயணிகளால் நிரம்பியிருந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

