திண்டுக்கல்லில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடியை, டி.எஸ்.பி தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (31). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், விக்னேஸ்வரன் மீண்டும் ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், நேற்று மாலை திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி கார்த்திக் தலைமையிலான போலீசார், சவேரியார்பாளையம் பகுதியில் உள்ள சிகேசிஎம் காலனியில் இருக்கும் விக்னேஸ்வரன் வீட்டிற்கு விசாரணைக்காகச் சென்றனர். அப்போது போலீசாருடன் வர மறுத்து விக்னேஸ்வரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) ஜான்சனின் கையில் பலமாக வெட்டினார். நிலைமை விபரீதமாவதைக் கண்ட டி.எஸ்.பி கார்த்திக், தற்காப்புக்காகத் தனது துப்பாக்கியால் விக்னேஸ்வரனின் வலது காலில் சுட்டார். இதில் குண்டு பாய்ந்த விக்னேஸ்வரன் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த எஸ்.ஐ ஜான்சன் மற்றும் காலில் குண்டு காயம் அடைந்த விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

