மணிப்பூர் மாநிலத்தில் 2023ம் ஆண்டு குகி, மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலை தடுக்க மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் மெல்ல சுமூக நிலை திரும்பி வருகிறது. ஆனாலும், பாதுகாப்புப்படையினர் மீது அவ்வப்போது பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அம்மாநிலத்தின் இம்பால் மாவட்டத்தில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு பாதுகாப்புப்படையினர் இன்று மாலை ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். பிஷ்னுபூர் மாவட்டம் நம்பால் சபல் லைகாய் பகுதியில் சென்றபோது அந்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.